பராமரிப்பு முறைகள் 
           
          இனப்பெருக்கப் பராமரிப்புகள் 
          
            
              - பன்றிகளின்  இனவிருத்தித் திறன் அதிகம். அதற்கேற்ப ஆண்டுக்கு இரு முறை குட்டி ஈனுமாறு அதனை முறையாகப்  பராமரித்தல் வேண்டும்.
 
              - ஒவ்வொரு  10 பெண் பன்றிக்கு 1 ஆண் பன்றி என்ற விகிதத்தில் பராமரித்தல் நலம்.
 
              - சரியான  சினைத்தருணத்தில் இனக்கலப்புச் செய்தல் அவசியம்.
 
             
           
          சினையான பன்றிகளின் பராமரிப்பு 
             
            குட்டி  ஈனுவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே சினைப் பன்றிக்கு தனிக்கவனம் செலுத்தவேண்டும். நல்ல  தீனி, சுத்தமான நீர், தூய்மையான இடத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். குட்டி ஈனும்  கொட்டிலை 3-4 நாட்கள் முன்னரே கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும். பின்  குட்டி ஈனும் போது சரியான படுக்கைவசதி இருக்குமாறு அமைத்து வைத்தல் வேண்டும். 
          பன்றிக்குட்டிகள் 
          
            
              - பன்றிக்குட்டிகள்  நசுங்கினால் இருக்கும் கம்பியமைப்பை ஏற்படுத்தி  வைக்கலாம்.
 
              - கூரிய  கத்திக் கொண்டு தொப்புள் கொடியை நறுக்கிய உடனே நோய்த் தொற்கு ஏற்படாமல் இருக்க  டிங்சர் (அ) அயோடினைத் தடவவேண்டும்.
 
              - முதல்  6-8 வாரங்கள் தாய்ப்பால் அருந்தச் செய்யவேண்டும்.
 
              - குடடிகளை  முதல் இரண்டு மாதங்கள் எந்த ஒரு தட்பவெப்பநிலை பாதிப்புக்கும் உள்ளாகாமல் பார்த்துக்  கொள்ளவேண்டும்.
 
              - கோரைப்புற்களை  நீக்கிவிடவேண்டும். அப்போதுதான் தாய்ப்பன்றியின் காம்புகள் காயம் படாமல் தடுக்க முடியும்.
 
              - முறையான  தடுப்பூசி அட்டவணைப்படி குட்டியிலிருந்தே தடுப்பூசிகளை முறையாகப் போட்டு வந்தால் எந்த  ஒரு நோய்த் தொற்றும் ஏற்படாமல் இருக்க உதவும்.
 
              - இரத்தச்  சோகை ஏற்படுவதைத் தடுக்க சரியான அளவு இரும்புச் சத்துத் தாதுக்களை அளித்தல் அவசியம்.
 
              - விற்பனைக்கு  அல்லது இறைச்சிக்காக வெட்டுமிடத்திற்கு அனுப்புமுன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருத்தல்  வேண்டும்.
 
              - இனப்பெருக்கத்திற்கு  பயன்படுத்தாத ஆண் குட்டிகளை காயடித்தல் செய்து (3-4 வாரங்களில்) விடுவதால் இதன் இறைச்சியின்  தரம் அதிகரிப்பதுடன் கெட்ட வாடை அடிக்காமல் இருக்க உதவும்.
 
              - பாலூட்டும்  பன்றிக்குத் தேவைப்படும் அளவு அடர் மற்றும்   கலப்புத் தீவனங்களை முறையாக அளித்தால் மட்டுமே நல்ல பால் சுரப்பு இருக்கும்.
 
             
           
             
            பன்றிக்குட்டிகள் 
          பெண் பன்றிகள் பராமரிப்பு 
          
            
              - பெண்  பன்றிகளை பிறந்ததிலிருந்தே நல்ல தீனி மற்றும் பராமரிப்புடன் வளர்த்துவரவேண்டும். அப்போது  தான் அவை ஈனும் குட்டிகள் ஆரோக்கியமான நல்ல எடை தருபவையாக இருத்தல் வேண்டும்.
 
              - குட்டி  ஈனும் கொட்டிலை 2 சதவிகிதம் பினைல் களிம்பு கொண்டு சுத்தப்படுத்தி ஒரு வாரம் முன்பே  தயார் செய்யவேண்டும்.
 
              - குட்டி  ஈனுவதற்கு சற்று முன்னரும் 2-3 வாரத்திற்கு முன்பு ஒரு முறையும் சினைப் பன்றிக்கு குடற்புழு  நீக்க மருந்து அளித்தல் அவசியம்.
 
              - புற  ஒட்டுண்ணித் தாக்குதலைக் குறைக்க 1 சதவிகிதம் மாலத்தியான் / சையத்தியான், பட்டாக்ஸ்  0.05 சதவிகிதம் கலந்த கரைசலை தெளிக்கவேண்டும். இக்கரைசல் கொண்டு அடிப்பகுதி, பக்கங்கள்  மற்றும் பன்றியின் மடியினை நன்கு தேய்த்துக் கழுவுதல் வேண்டும். மேலும் அழுக்கு, ஒட்டுண்ணி  முட்டைகள், நோய்க்கிருமிகள்  ஏதேனும் இருக்க  வாய்ப்புள்ளதால் குட்டி ஈனும் கொட்டிலுக்கு பன்றியை அனுப்பு முன் சோப்புக் கொண்டு  தேய்த்துக் கழுவுதல் நலம்.
 
              - 10  நாட்களுக்கு முன்பே குட்டி ஈனும் கொட்டிலுக்கு அனுப்பி விடலாம்.
 
              - நறுக்கிய  வைக்கோலை படுக்கை வசதிக்காக 3 நாட்களுக்கு முன்பே தயாரித்து வைத்தல் வேண்டும்.
 
              - பன்றியின்  காம்பு அழுத்திப் பார்த்தால் மிக மென்மையாக பால் சுரந்து காணப்படும். இது குட்டி ஈனப்போவதன்  அறிகுறியாகும்.
 
              - குட்டி  ஈனுதலின் போது எல்லாக் குட்டிகளையும் ஈனுவதற்கு 2-6 மணி நேரம் தேவைப்படும். சில சமயம்  20 மணி நேரம்கூட ஆகலாம். எனினும் எல்லாக் குட்டிகளையும் ஈனும் வரை அருகில் இருந்து  கவனித்துக் கொள்ளவேண்டும்.
 
              - குட்டிகளை  வைக்கோல் / துணி வைத்து மூக்கினருகே மூச்சுவிட எளிதாகுமாறு துடைத்துவிடவேண்டும். நன்கு  ஆரோக்கியமான குட்டிகள் 10-30 நிமிடத்தில் பாலூட்டிவிடும். சிறிய தெரியாத குட்டிகளுக்குக்  காம்பை வாயில் வைத்து ஊட்டப் பழக்கவேண்டும்.
 
              - இறந்து  போன குட்டிகள், நஞ்சுக்கொடி, படுக்கை அமைப்பு போன்றவற்றை குட்டி போட்ட பின் சிறிது  நேரத்தில் அப்புறப்படுத்தி புதைத்து விடுதல் வேண்டும்.
 
              - 50  கிராம் இரும்புச்சத்து (இம்ப்பெரான் 1 மிலி) அளவு கொடுத்து குட்டிகளுக்கு இரத்தச்சோகை  வராமல் தடுக்கலாம்.
 
              - கொட்டில்  எப்போது சுத்தமாக, மிதமான வெப்பநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். புறஊதாக்கதிர்  விளக்கு அல்லது மின்சார விளக்கு கொண்டு சிறிது வெப்பமான சூழ்நிலையை (குளிர் காலங்களில்)  உருவாக்கலாம். இதனால் குட்டிகள் கடுங்குளிரிலிருந்து சிறிது தப்பித்துக் கொள்ளும்.
 
             
           
          இனச்சேர்க்கை மற்றும் பராமரிப்பு 
             
            பெண்  பன்றியானது ஒவ்வொரு 21 நாட்களுக்கு ஒரு முறை சினைக்கு வரும். நல்ல பராமரிப்பும் தீவனமும்  பன்றிகள் சினைக்கு வருவதைத் துரிதப்படுத்துவதோடு அதிக எடையுள்ள குட்டிகளை ஈனுகின்றன.  பயறு வகைகள், தானியங்களோடு, கழிவு கொழுப்பு நீக்கப்பட்ட கால்நடைகளின் பால், மோர்  போன்றவற்றை இனக்கலப்பு செய்வதற்கு 2-3 வாரங்களுக்கு முன்பிருந்து கொடுத்து வந்தால்  பன்றியின் எடையானது 200-300 கிராம் கூடும். 
            
            இனச்சேர்க்கை 
          சராசரி  சினைப்பருவ காலம் 112-115 நாட்கள் அதே போல்   சராசரியாக ஒரு ஈற்றில் 8-10 குட்டிக்ள வரை ஈனும். நன்கு பராமரிக்கப் பட்டிருந்தால்  வயது முதிர்ந்த பன்றிகள் கூட நல்ல எடையுடன் நிறைய குட்டிகள் ஈனும். 
          குட்டி ஈனும் சமயத்தில் கவனிக்க  வேண்டியவை 
             
            சினையான  பன்றிகளை குட்டி ஈனுவதற்கு 3-4 நாட்கள் முன்பு குட்டி ஈனும் கொட்டிலுக்கு அனுப்பிவிட  வேண்டும். அப்போது தான் அது அப்புதிய சூழ்நிலைக்குப் பழகுவதோடு அது விரும்பிய படி  தனிமையில் இருக்க முடியும். 
          மேலும்  இந்தக் கொட்டில் நல்ல வெளிச்சத்துடன், காற்றோட்டமும் கொண்டு சுத்தமாக இருத்தல் வேண்டும்.  குட்டி ஈனும் போது தேவைப்பட்டால் மட்டுமே பன்றிக்கு உதவவேண்டும். குட்டிகள் பிறந்தவுடன்  அவற்றை துணி / வைக்கோல் கொண்டு துடைத்துப் பின் வெதுவெதுப்பான் வெப்பநிலையுடன் கூடிய  படுக்கையை அவைகளுக்கு அமைத்துத்  தருதல் வேண்டும். 
          
            
              - ஒரு  தாய்ப்பன்றியானது 8 வார இளங்குட்டி ஈன்ற காலங்களில் 150-200 கிலோகிராம் பால் கறக்கும்.  இதன் பால் மாட்டின் பாலை விட அதிக அடர்த்தியாக இருப்பதால் இதற்கு தீவனமும் அதிகம் தேவைப்படுகிறது.  ஒரு பன்றிக்கு 1.5 கிலோகிராமும் குட்டி ஒன்றிற்கு அரை கிலோ என்ற வீதம் 5-6 கிலோகிராம்  நாளொன்றுக்குத் தேவைப்படும். குதிரை மசால், வேலி மசால், முயல் மசால், சூடான் புல்,  சிவப்புக் குளோவர் போன்றவை பன்றிக்கு மிகச்சிறந்த பசும்புல் தீவனங்கள் ஆகும்.
 
              - குட்டிகளைத்  தாய்ப்பன்றியிடமிருந்து பிரித்த பின்வு பன்றிக்குத் கொடுக்கும் தீவன அளவை குறிப்பாக  அடர் தீவனத்தை சற்றுக் குறைக்கவேண்டும். இது பால் மடியில் சுரந்து வீணாவதைக் குறைக்க  உதவும்.
 
             
           
            
          ஆண்பன்றிப் பராமரிப்பு முறைகள் 
          
            
              - ஆண்பன்றிகள்  தனித்தனிக் கொட்டிலில் பராமரிக்கப்படவேண்டும். தீனி மிகையாகவோ, குறைந்து விடாமலோ  இல்லாமல் சரியான அளவு கொடுக்கவேண்டும். ஆண் பன்றியானது அளவான எடையோடு, அதிகக் கொழுப்பின்றி  இருத்தல் வேண்டும். கலப்புச் சேர்க்கை இல்லாத சமயங்களில் நிறையப் புற்களும் பயறு வகைப்  புற்களும், அடர் தீவனம் 2 கிலோ என்ற அளவிலும் கொடுக்கப்படவேண்டும். கலப்பு காலம்  தொடங்கும் போது இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்து 0.5 கிலோ அதிகமாகக் கொடுக்கலாம்.
 
              - இனக்கலப்புக்கு  பயன்படுத்தும் கிடாப்பன்றியின் வயது குறைந்தது 9 மாதமாவது இருக்கவேண்டும். இளம் கிடாவானது  ஒரு பருவத்திற்கு 15-20 பன்றிகளுடனும், முதிர்ந்த கிடா 25-45 பன்றிகளுடனும் கலப்புச்  செய்யலாம்.
 
              - இனக்கலப்பு  முடிந்த பிறகே தீவனம் அளிக்கவேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பெட்டைப்பன்றியுடன் மட்டுமே  இனக்கலப்பிற்கு அனுமதிக்கப்படவேண்டும்.
 
              - ஆண்  பன்றிக் கொட்டில் சுத்தமான தண்ணீர் வழங்கப்பட்டிருக்கவேண்டும். பன்றியை நன்கு கழுவித்  தூய்மையாக வைத்திருக்கவேண்டும். இளம் கிடாக்களை வயது முதிர்ந்த பெட்டைப் பன்றிகளோடு  கலப்புச் செய்யலாம்.
 
              - அவ்வப்போது  கால் நகங்களை வெட்டிவிடுதல் நல்லது. புதிதாக வாங்கப்பட்ட கிடாக்களைத் தனியே வைத்து  2 வாரங்கள் பராமரிக்கவேண்டும். இவ்வாறு செய்யும் போது அவைகளுக்கு ஏதேனும் நோய் தொற்று  இருந்தால் இது பண்ணையில் உள்ள பிற பன்றிகளுக்குப் பரவாமல் தடுக்க இயலும்.
 
             
           
          புதிதாகப் பிறந்த குட்டிகள் பராமரிப்பு 
          
            
              - பிறந்த  உடன் 8-10 முறை ஒரே நாளில் பாலூட்டப்பழக்கவேண்டும்.
 
             
              
               பிறந்த குட்டிகள் பாலூட்டம். 
            
              - குட்டி  ஈன்றவுடன் அதன் நாசித்துவாரத்தை துணிகொண்டு துடைத்து நல்ல படுக்கை அமைப்பை ஏற்படுத்தி  குட்டிகளைக் வெதுவெதுப்பான வெப்பநிலையில் இருக்குமாறு செய்யவேண்டும்.
 
              - பிறந்த  குட்டிகளுக்கு கோரைப்புற்களை நீக்கிவிடவேண்டும்.
 
              - குட்டிகளுக்கு  இரத்தசோகை ஏற்படாமல் இருக்க காப்பர். இரும்பு போன்ற தாதுக்கள் நிறைந்த தீனியளித்தல்  அவசியம்.
 
              - குட்டிகள்  தீவிர முறையில் வளர்க்கப்படுவதால் இயற்கையாக மண்தரையில் வளர்க்கப்படும் போது கிடைக்கக்கூடிய  தாதுச்சத்துக்கள் கிடைப்பதில்லை.
 
              - இவற்றைத்  தடுக்க பன்றிக்குட்டிகளை மண் தரையில் மேயவும், இரும்புச்சத்து, தாமிரச்சத்து மாத்திரைகளைக்  கொடுத்தும், தாயின் மடியில் இரும்பு சல்பேட், தாமிர சல்பேட் அடங்கிய மருந்துகளைத்  தடவலாம் அல்லது வெளியில் கிடைக்கும் இரும்பு - டெக்ஸ்ட்ரான் ஊசிகளைப் போடுவதன் மூலமும்  தேவையான சத்துக்கள் கிடைக்கச் செய்யலாம்.
 
              - குட்டிகள்  முதல் இரண்டு மூன்று வாரங்களுக்கு உலர் தீனிகள் மட்டுமே எடுக்கும். பின்பு இரண்டு வாரங்கள்  கழித்து தாயுடன் சேர்ந்து பிற தீவனங்களை உண்ணத் தொடங்கும் அப்போது அது உட்கொள்ளும்  அளவு,  அதிக சத்துள்ள தீவனங்களை அளித்தால் மட்டுமே  குட்டிகள் அதிக எடையுடன் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வெறும் தாய்ப்பன்றியின் பால்  மட்டும் குட்டிகளின் விரைவான வளர்ச்சிக்கு உதவாது. கீழ்க்கண்ட கலவைகளைக் கொண்டே குட்டிகளின்  சத்துணவு தயாரிக்கப்படுகிறது.
 
             
            
              
                | கலவைகள் | 
                பாகங்கள் | 
               
              
                | சிவப்புச்சோளம் | 
                65 | 
               
              
                | கரும்புச்    சக்கை / தோகை | 
                5 | 
               
              
                | கோதுமை    தவிடு | 
                10 | 
               
              
                | மீன்    கழிவு | 
                5 | 
               
              
                | தாதுக்கலவை | 
                1 | 
               
              
                | எதிர்ப்பொருட்கள் | 
                - | 
               
              
                | ஜிஎன்சி | 
                14 | 
               
             
           
          பன்றிக்குட்டிகளைப் பிரித்தல் 
          
            
              - 7,8  வது வாரங்களில் குட்டிகள் தாயிடமிருந்து முற்றிலும் பிரிக்கப்பட்டு விடவேண்டும். ஓரிரு  வாரங்கள் முன்பிருந்தே தாய்ப்பன்றியை சிறிது  நேரம் தனித்து அடைத்து வைத்துப் பழக்கவேண்டும். குட்டிகளைப் பிரித்த பின்பு தாய்ப்பன்றிக்குக்  கொடுக்கும் தீவன அளவை சற்றுக் குறைத்துக் கொள்ளலாம்.
 
             
           
          ஊட்டச்சத்துக்கள் 
             
            பன்றிப்  பண்ணையில் பன்றியின் இனம், வயது, உடல் எடை போன்ற காரணிகளைப் பொறுத்து, ஊட்டச்சத்துக்களின்  அளவு வேறுபடும். ஊட்டச்சத்து தேவையின்படி பன்றிகள் 11 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 
          பன்றிக்குட்டிகள்: 
          
            
              - பிறந்தகுட்டிகள்  (2-5 கிலோகிராம்)
 
              - வளரும்  குட்டிகள் (11-23 கிலோகிராம்)
 
             
           
          சந்தைக்கு வளர்க்கப்படும் பன்றிகள்: 
          
            
              - வளரும்  பன்றிகள் (23-57 கிகி)
 
              - வளர்ந்த  பன்றிகள் (57-91 கிகி)
 
             
           
          ஆண்பன்றி: 
          
          பெண் பன்றிகள்: 
          
            
              - பருவமடைந்த  பெண் பன்றி 
 
              - பருவமடைந்து  சினைக்குத் தயாராக இருக்கும் பெண் பன்றி
 
              - சினைப்பன்றி
 
              - குட்டி  ஈனப்போகும் பன்றிகள்
 
              - பாலூட்டும்  பன்றிகள்
 
             
           
          கழிவுகளை அகற்றுதல்: 
             
            உலர்ந்த  கட்டியான கழிவுகளை காலை மற்றும் மாலை வேளைகளில் உரம் சேகரிக்கும் குழியில் போட்டு  விடலாம். சிறுநீர், பன்றி கழுவும் நீர் போன்றவை கீழே ஏதேனும் தொட்டியில் சென்று விழுமாறு  கொட்டகையை அமைத்திருத்தல் வேண்டும். 
             
            ஒருங்கிணைப்பு 
             
            பன்றிப்  பண்ணையுடன் சாண எரிவாயு தயாரிப்பு அமைப்பையும் நிறுவினால் பண்ணைக்கும், வீட்டுத்தேவைக்கும்  தேவையான எரிவாயுவைத்  தயாரித்துக்கொள்ள முடியும்.  மேலும் இது தவிர மீன் வளர்ப்பும் இதனுடன் ஒருங்கிணைத்துச் செய்யலாம். பன்றிக்கழிவுகள்  வயலுக்க சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுகின்றது. 
             
          பன்றியின் தினசரிக் கழிவில் கிடைக்கும்  உர அளவு (தோராயமாக) 
          
            
              
                                  வயது (வாரங்களில்)                  | 
                உடல் எடை (கிலோகிராமில்) | 
                திட மற்றும் திரவக் கழிவு (லிட்டரில்) | 
               
              
                | 12 | 
                14 | 
                1.5 | 
               
              
                | 20 | 
                45 | 
                3.5 | 
               
              
                | 28 | 
                80 | 
                7.0 | 
               
              
                | பெண்    பன்றிகள் கழிவு | 
                - | 
                14.0 | 
               
             
           
          (டாக்டர்.  பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வேளாண் கல்லூரி, மதுரை) 
          
         |